ராணுவ வீரர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
காஷ்மீரின் சோபியான் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட மேஜர் ஆதித்ய குமார் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் 27 ம் தேதி சோபியான் பகுதியில் ராணுவத்தினர் மீது, கல்வீசி தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்களை விரட்ட, பாதுகாப்பு துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். கல்வீச்சில் ஈடுபட்ட 200 க்கும் மேற்பட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேஜர் ஆதித்ய குமார் உள்ளிட்ட 10 பாதுகாப்புப் படை வீரர்கள் மீது காஷ்மீர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதனை எதிர்த்து மேஜர் ஆதித்ய குமாரின் தந்தை லெப்டினன்ட் கர்னல் கரம்வீர் சிங் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.
அதில், துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த போது ஆதித்ய குமார் சம்பவ இடத்திலேயே இல்லை. காஷ்மீரில் தொடர்ந்து நடக்கும் இதுபோன்ற கல்வீச்சு சம்பவங்களை தடுத்து, அமைதியை திரும்பச் செய்வதற்காக பாதுகாப்பு படையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தால், அது சட்டத்தை தவறாக வழிநடத்துவதாகும் என தெரிவித்துள்ளார்.இவ்வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஆதித்ய குமார் மீது நடவடிக்கை எடுக்க காஷ்மீர் போலீசுக்கு தடை விதித்தது. மேலும் இவ்வழக்கு தொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை