இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் திட்டம்: அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் தொடர்ந்து தாக்குதலை முன்னெடுப்பார்கள் எனவும், இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் மேலும் பதட்டம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் அமெரிக்க உளவுத்துறை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே உள்ள சஞ்சுவான் ராணுவ முகாமிற்குள் புகுந்து ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 6 ராணுவ வீரர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடைபெற்ற மறு தினமே அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் டான் கோட்ஸ் வெளியிட்டுள்ள கருத்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உளவுத்தகவல்களுக்கான செனட் கமிட்டி முன்பு தனது அறிக்கையை சமர்பித்த டான்கோட்ஸ் இந்த தகவலை தெரிவித்துள்ளார். அணு ஆயுத வல்லமை கொண்ட ஆயுதங்கள் , பயங்கரவாதிகளுடன் நட்பு பாராட்டுவது, பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழப்பு நடவடிக்கைகளில் கட்டுப்பாடுகள் செய்வது, சீனாவுடன் நெருக்கமாக செல்வது போன்ற செயல்களால் அமெரிக்காவின் நலனுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் பாகிஸ்தான் தனது செயலை தொடர்கிறது என்று கோட்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், பாகிஸ்தான் ஆதரவு அளிக்கும் பயங்கரவாதிகள், இந்தியா, ஆப்கானிஸ்தான் மட்டும் அல்லாது அமெரிக்க நலன்களுக்கு எதிராகவும் தொடர்ந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கோட்ஸ் தெரிவித்தார்.
Source:Daily Thanthi
கருத்துகள் இல்லை