சீனாவின் திட்டத்தை உடைக்க இந்தியா அமெரிக்கா கூட்டு முயற்சி
சீனாவின் 'ஒரே மண்டலம்; ஒரே பாதை' திட்டத்துக்கு மாற்றாக இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகியவை இணைந்து புதிய திட்டத்தை உருவாக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
உலகளவில் மிகப்பெரிய வல்லரசாக வளர்ந்து வரும் சீனா, தனது பொருளாதார மற்றும் வர்த்தக ஆதிக்கத்தை உலகளவில் விரிவுப்படுத்துவதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு 'பட்டுப்பாதை திட்டம்' என்ற திட்டத்தை அமல்படுத்தியது. இதன்மூலம், சீனாவின் பொருளாதார சந்தையுடன் பல்வேறு உலக நாடுகளை சாலை மார்க்கமாக இணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
தற்போது, இந்த திட்டத்தை மேலும் விரிவுப்படுத்தும் விதமாக 'ஒரே மண்டலம்; ஒரே பாதை' என்ற புதிய திட்டத்தை அமல்படுத்துகிறது.
இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் உலக மக்கள் தொகையில் 60 சதவீதத்தையும் அதாவது 450 கோடி மக்களையும், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கையும் சீனா தன்வசப்படுத்தி விடும். இதன் மூலம், வர்த்தக ரீதியாக உலகளவில் சீனா மிகப்பெரிய பொருளாதார பலமிக்க நாடாக மாறும். இது, அமெரிக்கா உள்ளிட்ட இதர வல்லரசு நாடுகளையும், பொருளாதார பலமிக்க நாடுகளையும் பின்னுக்கு தள்ளிவிடும். சீனாவின் இத்திட்டம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனால், சீனாவுக்கு கடிவாளம் போடும் விதமாகவும், அதன் திட்டத்துக்கு மாற்றாக 'கூட்டு பிராந்திய அடிப்படை கட்டமைப்பு திட்டம்' என்ற திட்டத்தை கொண்டு வரவும் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய நாடுகள் திட்டமிட்டுள்ளன. இத்திட்டம் இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் மல்கம் டர்ன்புல் இந்த வார இறுதியில் அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் செல்கிறார். அப்போது, இத்திட்டம் பற்றி அதிபர் டொனால்டு டிரம்புடன் அவர் பேச்சுவார்த்ைத நடத்த உள்ளார்.
Source:dailyhunt
Post Comment
கருத்துகள் இல்லை