இந்திய பாதுகாப்புப் படை வீரர்களின் உயிர்தியாகம் வீண்போகாது – நிர்மலா சீதாராமன் உறுதி
தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான இந்திய பாதுகாப்புப் படை வீரர்களின் உயிர்தியாகம் வீண்போகாது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார்.
ஜம்முகாஷ்மீரில் முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தியை சந்தித்த பின் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். சுஞ்சுவான் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த அவர், வீரர்களின் உயிர்தியாகம் வீண்போகாது என்றார். பாதுகாப்புப் படையினரின் இடைவிடா முயற்சி காரணமாக தீவிரவாதிகளின் செயல்பாடுகள் மேலும் பரவாமல் தவிர்க்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் துணை நிற்கும் என ஆறுதல் தெரிவித்த அவர், எல்லைக்கு அப்பால் இருந்து தீவிரவாதிகள் கட்டுப்படுத்தப்படுவதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன என்றார். தற்போது வரை கிடைத்துள்ள ஆதாரங்களை தேசியப் பாதுகாப்பு முகமை ஆய்வு செய்து வருவதாக அவர் கூறினார். பாகிஸ்தானிடம் ஆதாரங்களை காட்டுவது தொடர்ந்தாலும், அந்நாட்டிலிருந்து தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.
தீவிரவாதிகள் ஊடுருவ உதவும் வகையில் பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாகவும் நிர்மலா சீத்தாராமன் குற்றம்சாட்டினார். தீவிரவாதிகள் ஜெய்ஷ் ஈ முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், பாகிஸ்தானிலிருந்து அசார் மசூத் அவர்களுக்கு நிதியளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த விபரீதத்துக்கு பாகிஸ்தான் உரிய விலை கொடுக்க வேண்டும் அவர் கடுமையாக எச்சரித்தார்.
Via:polimer
கருத்துகள் இல்லை