Breaking News

சென்னையில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக தமிழக வாலிபர் கைது


தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு சிலர் உளவு பார்த்து தகவல் தெரிவிப்பதாக தேசிய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் ரகசியமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு உத்தமன் தெருவை சேர்ந்த அன்சார்மீரான் (வயது 28) என்பவர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக தெரியவந்தது. சென்னையில் பதுங்கி இருந்த அன்சார் மீரானை தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

இதனையடுத்து அன்சார்மீரானை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி செந்தூர்பாண்டியன், அன்சார்மீரானை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். உடனே அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அன்சார்மீரானை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) மனுதாக்கல் செய்யப்பட உள்ளது. இதேபோல் முன்னாள் பேராசிரியர் ஒருவரையும் பிடித்து தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருவதாக தகவல் வெளியானது. ஆனால் அதுகுறித்து தகவல் தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர்.

ஐ.எஸ். பயங்கரவாதியுடன் தொடர்பு

சிரியாவில் இருந்து தமிழகம் வந்து ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஹாஜா பக்ரூதீன் என்பவர் ஆலோசனை கூட்டம் நடத்தியதாகவும், இதில் பங்கேற்ற அன்சார்மீரான், ஹாஜா பக்ரூதீன் தமிழகம் வருவதற்காக விமான டிக்கெட் உள்ளிட்ட பயண வசதிகளை செய்து தந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனவே ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சென்னையில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக தமிழக வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை