Breaking News

இந்தியாவில் ஜிகாத்தை முன்னெடுக்க சிறார்களை மூளைச்சலவை செய்யும் ஹபீஸ் சயீத்!


மும்பையில் 2008–ம் ஆண்டு, நவம்பர் 26–ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் நுழைந்து, 10–க்கும் மேற்பட்ட இடங்களில் அதிபயங்கர தாக்குதல்கள் நடத்தினர். இந்த தாக்குதல்களில் 166 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதல்களை, பாகிஸ்தானில் இருந்து கொண்டு மூளையாக செயல்பட்டு வழிநடத்தியவன் சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீத். லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜமாத் உத் தவா ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் தலைவரான ஹபீஸ் சயீத்தை, மும்பை தாக்குதலை தொடர்ந்து சர்வதேச பயங்கரவாதி என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பிரகடனம் செய்தது.

 மேலும், அவரது தலைக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலர் (சுமார் ரூ.65 கோடி) விலை வைத்தது. அமெரிக்காவின் நிர்ப்பந்தம் காரணமாக அவரை பாகிஸ்தான் அரசு சில காலம் வீட்டுக்காவலில் வைத்தது. ஆனால் கோர்ட்டு மூலம் வெளியே வந்துவிட்டான். ஹபீஸ் சயீத்தை மீண்டும் கைது செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கான நிதி மற்றும் பாதுகாப்பு உதவியை ரத்து செய்த அமெரிக்கா ஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்று பாகிஸ்தான் அரசை தொடர்ந்து நிர்ப்பந்தித்து வந்தது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும் பாகிஸ்தானில் ஆய்வை மேற்கொண்டது. இதனையடுத்து சர்வதேச அளவில் பொருளாதார தடையை எதிர்க்கொள்ள வேண்டியது இருக்கும் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் நடவடிக்கையை தொடங்கியது. மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தை பயங்கரவாதி என பாகிஸ்தான் அறிவித்தது. இதற்காக அந்த நாட்டின் பயங்கரவாத தடுப்பு சட்டம் அவசரமாக திருத்தப்பட்டது.  

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை செய்து உள்ள பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் அல் கொய்தா, தெக்ரீக் இ தலீபான் பாகிஸ்தான், லஷ்கர் இ ஜாங்வி, ஜமாத் உத் தவா, பலே இ இன்சானியத் பவுண்டேசன், லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட இயக்கங்கள் இடம் பெற்று உள்ளன. எனவே இந்த இயக்கங்கள், பாகிஸ்தானிலும் தடை செய்யப்பட்ட இயக்கங்களாக அமைகின்றன. காஷ்மீர் சுதந்திரத்திற்காக போராடுவதாக கூறிவரும் ஹபீஸ் சயீத் தொடர்ந்து பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் அனுப்பி தாக்குதலை முன்னெடுத்து வருகிறான். 

சிறார்கள் மூளைச்சலவை

இந்நிலையில் இந்தியாவில் ஜிகாத்தை முன்னெடுக்க பயங்கரவாதி ஹபீஸ் சயீத் சிறார்களை மூளைச்சலவை செய்து வருகிறான் என தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் ஜமாத் உத் தவா அமைப்பின் சார்பில் இஸ்லமாபாத்தில் நடந்த பேரணியில் சிறார்கள் கையில் தூப்பாக்கியுடன் பங்கேற்று உள்ளனர். காஷ்மீர் பாகிஸ்தானின் ஒருங்கிணைந்த பகுதியாகும் மற்றும் காஷ்மீர் விடுதலைக்கான ஆதரவு தொடரும் என வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளும் பேரணியில் இடம்பெற்று உள்ளது.

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் தாய் அமைப்பான ஜமாத்-உத்-தவா பாகிஸ்தானில் தொண்டு நிறுவனம் என்ற போர்வையில் செயல்பட்டு வருகிறது. தங்களுடைய இயக்கத்தில் இணையும்படி பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் சிறார்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறது. இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு எதிரான ஜிகாத்திற்கு தயாராக வாருங்கள் எனவும் பயங்கரவாத அமைப்பு ஆள்சேர்க்கிறது. இதில் சிறார்கள் குறிவைக்கப்படுகிறார்கள். ஜமாத்-உத்-தவா அமைப்பானது பாகிஸ்தான் முழுவதும் மதரஸாக்கள் மற்றும் இஸ்லாமிய மத பள்ளியை நடத்தி வருகிறது. அங்கு காஷ்மீர் விடுதலைக்கான புனித போரில் ஈடுபடுங்கள் என சிறார்கள் மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள். அவர்கள் மனித கேடயமாக பயன்படுத்தப்படுகிறார்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
"தெற்காசியாவில் மிகவும் ஆபத்தான பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் தாய் அமைப்பான ஜமாத்-உத்-தவா பாகிஸ்தானில் உள்ள சிறுவர்களை அவர்களுடைய சீருடைகளை அணிவித்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக சண்டையிட ஊக்குவிக்கிறது,” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை செய்து உள்ள பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் அல் கொய்தா, தெக்ரீக் இ தலீபான் பாகிஸ்தான், லஷ்கர் இ ஜாங்வி, ஜமாத்-உத்-தவா, பலே இ இன்சானியத் பவுண்டேசன், லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட இயக்கங்கள் இடம் பெற்று உள்ளன. லஷ்கர் மற்றும் ஜமாத்-உத்-தவா உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களுக்கு தடை விதிக்கப்பட்டாலும் இந்தியாவிற்கு எதிரான மறைமுகமான போருக்கு இந்த பயங்கரவாத இயக்கங்களை பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவு அமைப்பு பயன்படுத்தி வருகிறது.

Source:Daily thanthi

கருத்துகள் இல்லை